பாகிஸ்தானில் நடக்குமா ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜெய் ஷா அறிவிப்பு

மும்பை:  இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடத்தப்படுமா என்ற கேள்வி தொடரும் நிலையில் ‘இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெறும்’ என்று  ஏசிசி தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆசிய கோப்பை  கிரிக்கெட் போட்டி 50ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியாக நடத்த ஆசிய கிரிக்கெட்  கூட்டமைப்பு(ஏசிசி)  முடிவு செய்துள்ளது. காரணம் இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில்  ஐசிசி ஒருநாள் உலக கோப்பை போட்டி நடத்தப்பட உள்ளது.  அதே நேரத்தில் ஆசிய கோப்பையை போட்டியை நடத்தும் உரிமை  பாகிஸ்தானிடம் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு  பிசிசிஐ செயலாளரும், ஏசிசி தலைவருமான ஜெய் ஷா, ‘அரசியல் காரணங்களால்  இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படும்’ என்று  கூறினார். அவர் பேச்சு சர்ச்சையான நிலையில்,  பாகிஸ்தான் கடும்  கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆசிய கோப்பை எந்த வடிவில்... எப்போது நடத்தப்படும்... என்பதையும் 2023க்கான யு19, மகளிர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான சாலஞ்ஜர், ஆசிய கோப்பைகள் நடத்தப்படும் விவரங்களையும் ஜெய் ஷா நேற்று அறிவித்தார்.

ஆசிய கோப்பை போட்டி செப்டம்பர் மாதம் நடத்தப்படும். போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும். அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 அணிகள் இடம் பெறும். இந்தியா இடம் பெற்றுள்ள முதல் பிரிவில்  பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றுள்ளது. மேலும் 3வது அணி தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும். இரண்டாவது பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்து உள்ளன. லீக் சுற்றில் 6 ஆட்டங்கள், சூப்பர்-4 சுற்றில் 6 ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டம் என மொத்தம் 13 ஆட்டங்கள் ஆசிய கோப்பையில் நடத்தப்படும். அதே நேரத்தில் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுமா, வேறு நாட்டில் நடத்தப்படுமா என்பதை ஜெய் ஷா அறிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் தனது உரிமையை விட்டுத் தரும் வாய்ப்பு குறைவு என்பதால் சரியான தேதியுடன் அட்டவணையும், போட்டி நடைபெறும் இடமும் அறிவிக்க பல மாதங்கள் தாமதமாகலாம்.

Related Stories: