ஈரான் நாட்டின் தலைவர் விவகாரம்: பூதாகரமாகும் பிரான்ஸ் பத்திரிகை கார்ட்டூன்: தூதருக்கு சம்மன்; இரு நாடுகளிடையே மோதல்

தெஹ்ரான்: ஈரான் தலைவர் தொடர்பாக வெளியான பிரான்ஸ் பத்திரிகை கார்ட்டூன், தற்போது இரு நாடுகளுக்கு இடையே கருத்து மோதலை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடை தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மோதல் சம்பவத்தில் சிலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகையில் ஈரான் நாட்டின்  தலைவர் அயதுல்லா அலி  கமேனி குறித்த நையாண்டி கார்ட்டூனை வெளியிட்டது.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாயன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பிரான்ஸ் பத்திரிகை கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அவமானகரமான மற்றும் அநாகரீகமான செயலாகும். பிரான்ஸ் அரசு நிர்வாகம், அதன் எல்லைகளைத் தாண்டிச் செல்வதை அனுமதிக்க மாட்டோம். அவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டில் உள்ள பிரான்ஸ்தூதர் நிக்கோலஸ் ரோச்சிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனனி கூறுகையில், ‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மதம் தொடர்பான கார்ட்டூன் விமர்சனங்களை ஏற்க முடியாது. பிரான்ஸ் அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்றார். இதற்கிடையே பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் நத்தாலி லோய்சோ கூறுகையில், ‘ஈரானில் அடக்குமுறை ஆட்சி நடக்கும் நிலையில், அவர்கள் எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டியதில்லை’ என்று கூறினார்.

Related Stories: