மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் திருநல்லூர் ஜல்லிக்கட்டு: திருநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டை: மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ்பெற்ற திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. விராலிமலை அருகே உள்ள திருநல்லூரில் ஆண்டுதோறும் தை மாதம் 29-ம் தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் 7 வாடிவாசல்களை அமைத்து ஒரே நேரத்தில் ஆவேசம் குறையாத காளைகளை அவிழ்த்து விட்டு அவற்றை அடக்கும் காளையர்களின் வீரத்தை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கம்.

மேலும் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவது சிறப்பு. இந்நிலையில், நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு போட்டியை பிப்ரவரி 12-ம் தேதி நடத்துவதற்கு விழா குழுவினர் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை என்றாலும் ஏராளமான காளைகள் பங்கேற்கும். புதுக்கோட்டை, திருச்சி உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் காளை வளர்ப்போர் தங்கள் வளர்க்கும் மாடுகளை முதன் முதலில் திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் முன்பு நிறுத்தி வழிபாடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.   

Related Stories: