குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

*மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்

நாகர்கோவில் : குமரி மாவட்ட ஊராட்சி சாதாரண கூட்டம் அதன் தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. துணை தலைவர் சிவகுமார், உறுப்பினர்கள் அம்பிளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ்பாபு, ஜோபி, ஜாண்சிலின் விஜிலா, ஷர்மிளா ஏஞ்சல், நீலபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

மெர்லியன்ட் தாஸ்: குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவை எப்போது சீரமைக்கப்படும்?நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஜெரால்டு ஆன்றனி: மாவட்டத்தில் 1200 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ரூ.50 முதல் ரூ.60 கோடி ரூபாய்க்கு சீரமைப்பு பணிகள் நடை பெறுகிறது. சிறப்பு நிகழ்வாக இந்தமுறை தேங்காப்பட்டணத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்படுகின்ற பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதை தவிர காப்புக்காடு சந்திப்பு, பாலூர் சந்திப்பு, புதுக்கடை, சிராயன்குழி, இரணியல் சந்திப்பு உட்பட 7 பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்து சாலைகளை விரிவு படுத்தி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மழை ஓய்ந்ததும் மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளில் பேட்ஜ் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய நெடுஞ்சாலை அதிகாரி: குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைத் துறை இடமிருந்து மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்கோவிலில் 9 கி.மீ, தக்கலையில் 1 கிலோ மீட்டர், குழித்துறையில் 1 கிலோமீட்டர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் சீரமைக்கப்பட்டு பின்னர் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்படும்.

ஜாண்சிலின் விஜிலா: கலெக்டர் அலுவலக பின்பகுதியில் உள்ள கூடுதல் கட்டடம் பகுதியில் உள்ள வாசல் மூடப்பட்டுள்ளது. இந்த வாசலை முற்றிலும் மூடி வைத்துள்ளதால் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அலுவலகம் வருகின்ற பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த வாசலை முன்பு இருந்தது போன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும்.

வருவாய்த்துறை அலுவலர்: கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சிகள் நடைபெற்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்.பி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இது மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் அழைப்பு விடுத்தும் வருகை தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கூட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் பாஜ உறுப்பினர்கள் துணை தலைவர் சிவகுமார், உறுப்பினர் ராஜேஷ்பாபு ஆகியோர் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கமிட்டியின் அறிக்கை இந்துக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி அறிக்கையை கிழித்து போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் கூட்டத்தில் தலக்குளம் வேலுத்தம்பி தளவாய் நினைவு இல்லத்தை அரசுடமையாக்கி சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மழையால் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து தேனையும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் வாயிலாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் வளர்ச்சி பெறாத குக்கிராமங்கள் அதிகம் உள்ளது, எனவே மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியோடு இணைத்திடும் நடவடிக்கைகள் மற்றும் கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும், குமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகள் மற்றும் இருவழி ரயில்பாதை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ.9 கோடி லாபம்

மெர்லியன்ட் தாஸ்: கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி:

* கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடம் பகுதிக்கு தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது. கடலில் நீரோட்டம் அதிகம், அலைகள் அதிகம், காற்றின் வேகம் அதிகம் போன்ற தருணங்களில் படகு போக்குவரத்து நடைபெறாது.

* 365 நாட்களும் விடுமுறையின்றி படகு போக்குவரத்து நடைபெறும்.

* விவேகானந்தா, பொதிகை, குகன் என்று மூன்று படகுகள் இயக்கப்படுகிறது. மேலும் வட்டக்கோட்டை வரை சென்று வரும் வகையில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய படகுகளும் இயக்கப்படுகிறது.

* ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாக உள்ளது ஜூன் 15 பிறகு ‘ஆப் சீசன்’ ஆக உள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் குமரி மாவட்ட பிரிவு கடந்த நிதி ஆண்டு ரூ.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு சீசன் சற்று மோசமாக இடம்பெற்றுள்ளது.

* கடுமையான வெயில், கடல் நீரோட்டத்தில் மாற்றம், பிரதமர் வருகை போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு உண்டு.

The post குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: