விளையாட்டு திடலை சீரமைக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு: கீரப்பாக்கம் ஊராட்சியில் தாசில்தார் ஆய்வு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு விநாயகபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு திடல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் விளையாட்டு திடலில் தண்ணீர் நிரம்பி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் விளையாட முடியாமல் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வார்டு உறுப்பினர் சசிகலா, திமுக ஊராட்சி தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம்.இளங்கோவன் என்ற கார்த்திக், ஒன்றிய சேர்மன் உதயா கருணாகரன், மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய்கிருஷ்ணன், வெங்கட்டராகவன் ஆகியோர்  அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திமுக ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம்.இளங்கோவன் என்ற கார்த்திக், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மனு கொடுத்திருந்தார்.

மனுவை பெற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், மனு  மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மற்றும் வண்டலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வண்டலூர் தாசில்தார் பாலாஜி,  விநாயகபுரம் விளையாட்டு விளையாட்டு திடலை நேற்று மதியம் ஆய்வு செய்தார். அப்போது, விளையாட்டு திடலை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  கிராம நிர்வாக அலுவலர் அபிராமி, ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம்.இளங்கோவன் என்ற கார்த்திக், 4வது வார்டு உறுப்பினர் சசிகலா உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: