ராயபுரம் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தண்டையார்பேட்டை: தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை மற்றும் மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. இதனை ஒரு சிலர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, மொத்தமாக ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதை தடுக்க  புட் செல்  போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு அதிகளவு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் சோதனை செய்தபோது, வேலாயுத பாண்டியன் தெருவில் ஒரு வீட்டில், தனசேகர் (55) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்து தனசேகர் தலைமறைவாகி விட்டார். அங்கிருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், தனசேகர் ரேஷன் அரிசியை டன் கணக்கில் குறைந்த விலைக்கு வாங்கி, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தும் மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்வதாகவும், அவர் ஒரு நாளைக்கு 70 டன் ரேஷன் அரிசியை வடசென்னை பகுதியில் இருந்து கடத்தி, செங்குன்றத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து, அங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்கு கன்டெய்னர் லாரி, மினி வேன் மூலம் கடத்தி செல்வது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: