செம்மஞ்சேரி பகுதியில் சாலையில் வெளியேற்றப்படும் தனியார் நிறுவன கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் தனியார் நிறுவன கழிவுநீரை சாலையில் வெளியேற்றுவதால், துற்நாற்றம் மற்றும் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 200 வார்டுக்குட்பட்ட செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், காசா கார்டன் எலான் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்து 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

ராஜிவ் காந்தி சாலையிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில், தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கழிவுநீர் நேரடியாக சாலையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலை பள்ளங்களில் இந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும், சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், அருகில் உள்ள காலி மனைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: