வெளிநாட்டினர் கனடாவில் சொத்து வாங்க முடியாது: 2 ஆண்டு தடை சட்டம் அமல்

ஒட்டாவா: கனடாவில் 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்டம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குடியிருப்பு வீடுகளை வாங்குவதில் முதலீடு செய்வதால் குடியிருப்பு வீடுகள், நிலங்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கனடா மக்கள் சொந்த நாட்டிலேயே சொத்துக்களை வாங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது சொத்துக்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு தற்காலிகமாக இரண்டு ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் வாக்குறுதி அளித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது இரண்டு ஆண்டு தடை சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி வெளிநாட்டினர் கனடாவில் சொத்துக்களை வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் குடியேறியவர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த தடை சட்டம் பொருந்தாது.

Related Stories: