செய்யாறில் மதுபாட்டில் விற்பதில் முன்விரோதம் மொபட்டில் சென்ற பெண்ணை காரை ஏற்றி கொன்ற எதிர்கோஷ்டி: கணவர் போலீசில் பரபரப்பு புகார்

செய்யாறு: செய்யாறில் மதுபாட்டில் விற்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மொபட்டில் சென்ற பெண், காரை ஏற்றி கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், வெங்கட்ராயன்பேட்டை சேட் நகரை சேர்ந்தவர் முருகன்(45), நெசவு தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(39), நேற்று காலை 7 மணியளவில் மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜலட்சுமி, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவரது கணவர் முருகன் செய்யாறு போலீசில் அளித்த புகாரில், என் மனைவிக்கும் செய்யாறு பிரபு, கூடநகர் மாரி, வெங்கட்ராயன் பேட்டை சதீஷ்குமார் ஆகியோருக்கும் மதுபாட்டில் விற்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. பிரபு மற்றும் மாரி ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு, ‘நாங்கள் விற்கும் பகுதியில் சரக்கு விற்றால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் தான் என் மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: