கள்ளக்காதலை கண்டித்த மனைவி கழுத்தறுத்து கொலை: கூகுளில் கொலை தகவல்களை தேடிய கணவன் கைது

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில் ‘கொலை செய்வது எப்படி’ என்று கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த நபரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரத்தில் வசிக்கும் விகாஸ் - சோனியா தம்பதி, கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தி, தனது மனைவி சோனியாவை கழுத்தை அறுத்து விகாஸ் கொன்றுவிட்டார். ஆனால் போலீசாரிடம், கொள்ளையர்கள் காரை மடக்கி, தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றதாக புகார் அளித்தார். இவ்விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் விகாசிடம் போலீசார் விசாரித்தனர்.

விகாசின் செல்போனை போலீசார் பரிசோதித்ததில், அவர் கூகுளில் ‘கொலை செய்வது எப்படி’, ‘எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம்’ என்பது போன்ற இணையத் தேடல்களை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் இணைய வழி விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் இருந்து விஷம் வாங்க முயன்றதும் தெரிய வந்தது. திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு, விகாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், சோனியாவுக்கும் விகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விகாஸ் சோனியாவை கொலை செய்ய அவரது கள்ளக்காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதும் தெரியவந்து. அதையடுத்து தற்போது விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கள்ளக்காதலியை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஹாபூர் போலீஸ் எஸ்பி தீபக் கூறுகையில், ‘விகாஸ் சர்மாவிற்கு, மற்றொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது. அதனை அவரது மனைவி சோனியா கண்டித்துள்ளார். அதனால் கள்ளக்காதலியின் ஆலோசனையின் பேரில், தனது மனைவி சோனியாவை விகாஸ் கழுத்தை அறுத்து கொன்றார். அவரது கள்ளக்காதலியை தேடி வருகிறோம்’ என்றார்.

Related Stories: