அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் கான்ஸ்டபிள் கைது

மும்பை: மும்பையில் அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கான்ஸ்டபிளை போலீசார் கைது ெசய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஐ.ஐ.டி-யில் படிக்கும் 19 வயது மாணவி, கல்லூரி வளாகத்தில் இருந்து சன்பதா பகுதியில் உள்ள தனது வகுப்பு ஆண் நண்பரை சந்திக்க சென்றார்.

பாம் பீச் சாலையில் அதிகாலை நடந்து சென்ற போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் குழு அந்த மாணவியை மடக்கி விசாரணை நடத்தியது. அப்போது அந்த மாணவி தனது அடையாள அட்டையை காட்டினார். தனது நண்பரை சந்திக்க செல்ல உள்ளதாகவும் கூறினர். அதன்பின் போலீஸ் ரோந்து வாகனம் சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவ்வழியாக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். அவர், மாணவியிடம் விசாரிக்கத் தொடங்கினார். பின்னர் தான் குறிப்பிட்ட பகுதி வரை அழைத்து சென்று உதவுவதாக கூறினார். ஆனால் மாணவி மறுத்துவிட்டார்.

இதை ஏற்க மறுத்த போலீஸ் கான்ஸ்டபிள், வலுகட்டாயமாக தனது பைக்கில் ஏறச்சொல்லி கையைப் பிடித்து இழுத்தார். மேலும் பாலியல் ரீதியாக அவரை துன்புறுத்தி உள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். இதையடுத்து அவ்வழியாக சென்ற கார் டிரைவர் ஒருவர், தனது காரை நிறுத்தி மாணவிக்கு உதவ முன்வந்தார்.

அடுத்த சில நிமிடங்களில், மாணவியை துன்புறுத்திய கான்ஸ்டபிள் அங்கிருந்து கிளம்பிவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவி, அடுத்த நாள் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். சம்பவ நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்தாரா? என்பது அறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: