சிவகிரி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: தென்னை, மா, கொய்யா மரங்களை வேரோடு சாய்த்து நாசம்

சிவகிரி: சிவகிரி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதில், தென்னை, மா, கொய்யா மரங்களை வேரோடு சாய்த்து நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி நகருக்கு மேற்கே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது. இதில், மா, தென்னை, வாழை, கரும்பு, நெல், நெல்லி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த விளைநிலங்களுக்குள் அவ்வப்போது காட்டு பன்றி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மேற்குத் தொடச்சி மலையை ஒட்டியுள்ள சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த தென்னை, மா, கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரங்களை வேரோடு சாய்த்து நாசம் செய்தது. இதில் சுடலையாண்டி மகன் செண்பக விநாயகம் என்பவரது 80 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, மா, கொய்யா மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

கந்தசாமி மகன் ஆயில்ராஜா பாண்டியன் என்பவரின் தோப்புக்குள் புகுந்த யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை, மா போன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் யானைகள், விளைநிலங்களுக்குள் புகாமலிருக்க வனத்துறையினர், வருவாய்த்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளோம். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: