காஸ் சிலிண்டர் திருடனை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு 2 போலீசுக்கு கத்திக்குத்து: வேதாரண்யம் அருகே பரபரப்பு

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை(45). இவர், கடந்த மார்ச் மாதம் கோடியக்கரையில் உள்ள நூர்முகமது என்பவரது வீட்டில் காஸ் சிலிண்டர் திருடியதாக புகார் கூறப்பட்டது. அவரை பிடிக்க கோடியக்காட்டில் உள்ள வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன், போலீஸ்காரர்கள் ராஜ்அய்யப்பன், சக்திவேல் ஆகியோர் நேற்று அதிகாலை சென்றனர். உடனே செல்லத்துரை, அவரது மனைவி ராணி(40), மகன் வீரக்குமார்(25), மகள் கலிப்பிரியா(20) மற்றும் செல்லத்துரையின் தாய் பார்வதி(70) ஆகியோர் சேர்ந்து, இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸ்காரர்களை கட்டை, கற்களால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் குணசேகரனின் மண்டை உடைந்ததோடு, அவரது வலது கை மூட்டு இறங்கியது.

போலீஸ்காரர்கள் ராஜ்அய்யப்பன், சக்திவேலுக்கு கையில் கத்தியால் குத்தியதில் கீறல் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியிலும், போலீஸ்காரர்கள் இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அதிரடிப்படையினர் செல்லத்துரையை பிடிக்க சென்றபோது போலீசாரை தாக்கியதோடு பல்லால் கடித்தார். இதில் எஸ்ஐக்கள் வெங்கடாச்சலம், சேகர், எஸ்எஸ்ஐ அன்பழகன், ஏட்டு பாலமுருகன் ஆகியோர் காயம் அடைந்தனர். எனினும் போலீசார் செல்லத்துரை, அவரது மகன் வீரக்குமார், மகள் கலிப்பிரியா ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர். தாய் பார்வதி கைது செய்யப்பட்டார். மனைவி ராணியை தேடி வருகின்றனர்.

Related Stories: