கருணை அடிப்படையில் 113 பேருக்கு பணி நியமன ஆணை: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்

சென்னை: தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் 2021-22ம் ஆண்டு காவல்துறை மானியக்கோரிக்கையில் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 912 பேருக்கு கடந்த 27.8.2022 அன்று, பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தற்போது இரண்டாம் கட்டமாக கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 67 ஆண்கள் மற்றும் 46 பெண்கள் என  மொத்தம் 113 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 12 பேருக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பணி நியமன ஆணைகள் பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி வரவேற்பாளர் பணிகள், மக்கள் தொடர்பு, கணினி பயிற்சி, தட்டச்சு பயிற்சி, காவல் நிலைய பணிகள் போன்றவற்றில் 3 கால பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பிறகு காவல் நிலையங்களில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: