அண்ணாசாலையில் நடந்து சென்றபோது போலீஸ் என கூறி மென்பொறியாளரிடம் லேப்டாப், பணம், ஏடிஎம் கார்டு பறிப்பு: சிசிடிவி கேமரா மூலம் 3 மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: பணி முடிந்து அண்ணாசாலையில் நள்ளிரவு நடந்து சென்ற மென் பொறியாளர் ஒருவரை வழிமறித்து, போலீஸ் என மிரட்டி லேப்டாப், ஏடிஎம் கார்டு மற்றும் பணத்தை பறித்த 3 மர்ம நபர்களை சிசிடிவி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (32). மென் பொறியாளர்.

இவர், ேநற்றிரவு பணி முடிந்து தனது அறைக்கு அண்ணாசாலை வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த 3 நபர்கள், போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு ‘நள்ளிரவு நேரத்தில் எங்கே செல்கிறாய்’ என செல்லப்பாண்டியனை மிரட்டினர். சிறிது நேரத்தில், செல்லப்பாண்டி வைத்திருந்த லேப்டாப்பை பையுடன் பறித்தனர். அதோடு ஏடிஎம் கார்டு, ரூ.500 பணத்துடன் மணிபர்ஸ் ஆகியவை பறித்து கொண்டு, ‘நாளை காலை காவல் நிலையத்திற்கு வந்து வாங்கி கொள்’ என கூறி தப்பி சென்றனர்.

இதையடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு சென்ற செல்லபாண்டியன், அங்கிருந்த போலீசாரிடம் ‘என்னிடம் வாங்கி வந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திரும்ப கொடுங்கள்’ என்று கூறியுள்ளார். அதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ‘நாங்கள் யாரிடமும் பொருட்களை வாங்கி வரவில்லையே.. உங்களை யாரோ ஏமாற்றி லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்’ என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொறியாளர், வேறு வழியின்றி சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: