அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் கதர் மற்றும் பனை வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களால் இன்று கதர் மற்றும் பனை வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கதர் வாரியத்தின் நோக்கங்கள், தொழில்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களுடன் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் அவர்களால் காட்சி வழியாக  மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேற்காணும் கதர் வாரியத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் பொதுமக்கள், பணிக்கு செல்லும் பெண்கள் ஆகியோரை கவரும் வகையில் புத்தம் புது வடிவமைப்புகள், வண்ணங்களில் காட்டன் புடவைகள், பட்டுப்புடவைகள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் ஆகியவற்றை தொடர்ந்து தயாரித்து விற்பனை செய்யவேண்டுமென தெரிவிக்கப்பட்டது. கதர் வாரியத்திலுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நூற்பு, நெசவு பணிகளை செயல்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கிராமத் தொழில் பொருட்களில் சோப்பு வகைகள், அலுவலக தளவாட பொருட்கள், தோல் காலணிகள், பூஜை பொருட்கள், அகர்பத்திகள் மற்றும் தேன் வகைகளுக்கு நல்லதொரு சந்தை வாய்ப்பு உள்ளதால் இதன் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க  வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் மதிப்புக்கூட்டு தேன் பொருட்கள், பாரம்பரிய மரச் செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள் ஆகியவைகள் மக்களைக் கவரும் வண்ணம் இருப்பதால் இதன் உற்பத்தியை அதிகப்படுத்தி விற்பனையை விரிவுபடுத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

2020-21 -ம் ஆண்டில்  ரூ. 38.65 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்களும், 2021-22-ம் ஆண்டில்  ரூ. 47.06 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்களும், 2022-23-க்கு   ரூ.60.00 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்ததில், நவம்பர் 2022 வரை ரூ.30.61 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான விற்பனை இலக்கினை கண்டிப்பாக எய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இளைஞர்களை கவரும் நோக்கில் தற்போதைய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி இணையதள விற்பனை மற்றும் தனியுரிமை கிளைகளுக்கான உரிமங்களை வழங்கி விற்பனையை அதிகரிக்க வேண்டுமென  அறிவுறுத்தப்பட்டது.

ஒன்றிய அரசின் திட்டமான பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் இலக்கான ரூ.30.53 கோடியை தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கி, இவ்வருட இலக்கினை அடைய வேண்டுமென  அறிவுறுத்தப்பட்டது. மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களின்  இன்னல்களை போக்கிட மழைக்காலப் பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5000/- வீதம் நடப்பாண்டில் 11676 நபர்களுக்கு ரூ.5.84 கோடியை விரைவில்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு இந்த வருடம் வழங்க வேண்டிய 2175 மின் விசைச் சக்கரங்களுக்கான உற்பத்தி பணிகளை விரைவில் துவக்கி முடித்திடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

கதர் மற்றும் பனை வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும் விலை குறைவாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் குறும்படங்களை அவ்வப்போது தயாரித்து தொலைக்காட்சிகள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விளம்பரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான மாவட்டங்களுக்கு சிறப்பு சேர்க்கும் உண்ணும் மற்றும் உண்ணா பொருட்களை கண்டறிந்து கொள்முதல் செய்து  கதரங்காடிகள், தனியார் விற்பனை அங்காடிகள் மற்றும் சர்வோதயா சங்கங்களில் விற்பனை செய்யும் திட்டத்தை விரைவில் துவக்குமாறும்  அத்திட்டத்தினை செவ்வனே நடைமுறைப்படுத்த துறையின் அனைத்து அலுவலர்களும் தகுந்த ஒத்துழுப்பை நல்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.  

தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் பனை வாரியத்தால் பதநீர் இறக்குவதற்கான உரிமங்களை அவ்வப்போது தொய்வின்றி வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. பனைத் தொழில் மற்றும் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் அரசால் பல திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதனில் குறிப்பாக பெண்களுக்கு பனை ஓலைப்பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி விரைவில் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

மருத்துவக் குணம் கொண்ட பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனை வெல்ல சாக்லேட் மற்றும் பனம் பழங்கூழ் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “கற்பகம்“ என்ற வணிக பெயரில், நவம்பர் 2022 வரையில் ரூ.414.69 இலட்சம் மதிப்பிலான  90.15 டன் தரமான பனை வெல்லமும், இதேபோன்று “கரும்பனை“ என்ற பெயரில் ரூ .40.95 இலட்சம் மதிப்பிலான 10.50 டன் பனை வெல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இவ்விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனவும், அதன் மூலம் பனை விவசாயிகளுக்கு உதவ வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: