சபரிமலையில் இன்று மண்டல பூஜை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை: மகரவிளக்கு பூஜைக்காக 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் நவ. 17ம் தேதி தொடங்கியது. கடந்த இரு ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும்  நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. தினமும்  சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று (27ம் தேதி) நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420  பவுன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி காலை ஊர்வலமாக சபரிமலை நோக்கி  புறப்பட்டது. ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக நேற்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சன்னிதானத்தை  அடைந்தது. தொடர்ந்து, ஐயப்பனுக்கு தங்க  அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை  நடைபெற்றது. தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று மதியம் 12.30 மணியில் இருந்து ஒரு மணிக்கு இடைப்பட்ட காலத்தில் சுவாமிக்கு மண்டல பூஜை  நடைபெறும். இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து இரவு கோயில் நடை சார்த்தப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 28, 29 தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

* 29 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம்

கடந்த 40 நாட்களில் இதுவரை 29 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டது தான் குழந்தைகள் வருகை அதிகரிக்க காரணம் என்று தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.

* ரூ.223 கோடி வருமானம்

சபரிமலையில் இந்தாண்டு பக்தர்கள் வருகை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. நேற்று வரை கடந்த 40 நாட்களில் மொத்த வருமானம் ரூ.223 கோடியை தாண்டியுள்ளது. காணிக்கை இனத்தில் மட்டும் வருமானம் ரூ.70 கோடிக்கு அதிகமாக கிடைத்துள்ளது. 

Related Stories: