ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம் ரூ.18.5 கோடிக்கு சாம் கரன் ஏலம்: பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது

கொச்சி: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. 2023 சீசனுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம், கொச்சியில் நேற்று நடந்தது. மொத்தம் 87 இடங்களை நிரப்புவதற்கான ஏலப் பட்டியலில் 405 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவை சேர்ந்த 273 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 132 பேரும் ஏலத்தில் விடப்பட்டனர். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனை தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வசம் (ரூ.16.25 கோடி, 2021) இருந்தது. அடுத்த இடத்தில் இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் (ரூ.16 கோடி, 2015) இருந்தார். இந்த நிலையில், நேற்று நடந்த பரபரப்பான ஏலத்தில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

முதலாவதாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஏலம் விடப்பட்டார். இவரது அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி அதே விலைக்கு வில்லியம்சனை வாங்கியது. அடுத்ததாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் கடும் போட்டிக்கிடையே ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அடுத்து ஏலம் விடப்பட்ட மயாங்க் அகர்வாலையும் சன்ரைசர்ஸ் ரூ.8.25 கோடிக்கு வசப்படுத்தியது. அஜிங்க்யா ரகானேவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கே சென்னை அணி ஏலம் எடுத்தது. நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் (இங்கிலாந்து), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) ஆகியோரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டாததால், விலை போகாத வீரர்கள் பட்டியலில் அவர்கள் இடம் பிடித்தனர்.

அடுத்ததாக, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரன் ஏலத்துக்கு வந்தார். ஐசிசி உலக கோப்பை டி20ல் தொடர் நாயகன், பைனலின் ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இவரை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் முண்டியடித்தன. இடையில் சென்னை, குஜராத், பஞ்சாப் அணிகளும் களத்தில் குதிக்க, ஏலம் சூடுபிடித்தது. கடுமையான போட்டிக்கு இடையே பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமை சாம் கரனுக்கு கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் அணி ரூ.5.75 கோடிக்கு வாங்கிய நிலையில், ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன் ரூ.17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டது 2வது அதிகபட்ச தொகையாக அமைந்தது. அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனும் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ் ஏலம் விடப்பட்டார். இவரை வாங்கவும் கடும் போட்டி இருந்த நிலையில், சென்னை அணி ரூ.16.25 கோடிக்கு வாங்கியது. வெஸ்ட் இண்டீசின் நிகோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தமிழக அணி தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.90 லட்சத்துக்கு வாங்கியது.

Related Stories: