பன்ட் 93, ஷ்ரேயாஸ் 87 ரன் விளாசல்: முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது இந்தியா

மிர்பூர்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பன்ட் - ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த  வங்கதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (73.5 ஓவர்). இந்திய பந்துவீச்சில் உமேஷ், அஷ்வின் தலா 4 விக்கெட், உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் ராகுல் 3 ரன், கில் 14 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் 10, கில் 20, புஜாரா 24 ரன் எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். விராத் கோஹ்லி தன் பங்குக்கு 24 ரன் எடுத்து டஸ்கின் அகமது வேகத்தில் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் வசம் பிடிபட்டார். இந்தியா 37.4 ஓவரில் 94 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரிஷப் பன்ட் - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பன்ட் 49 பந்தில் அரை சதம் அடிக்க, ஷ்ரேயாஸ் 60 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்து அசத்தியது. சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பன்ட் 93 ரன் எடுத்து (104 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) மிராஸ் பந்துவீச்சில் நூருல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அக்சர் படேல் 4 ரன்னில் வெளியேற, ஷ்ரேயாஸ் 87 ரன் (105 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷாகிப் சுழலில் ஆட்டமிழந்தார். அஷ்வின் 12, உமேஷ் 14, சிராஜ் 7 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்து (86.3 ஓவர்) ஆல் அவுட்டானது. ஜெய்தேவ் உனத்கட் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் ஹசன், தைஜுல் இஸ்லாம் தலா 4, டஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 87 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்துள்ளது. ஷான்டோ 5 ரன், ஜாகிர் ஹசன் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: