உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகள்-ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

உடுமலை : உடுமலை,மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் காட்டுப்பன்றிகள் விளைநிலத்தை பாழ்படுத்துவதால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை,  மடத்துகுளம் தாலுகா பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி  நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மக்காச்சோளம்,  மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி  சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டு பருவமழை  நன்றாக பெய்தததன் காரணமாக அமராவதி, திருமூர்த்தி அணையின் கரையோர பகுதிகளில்  கூட தென்னைக்கு ஊடுபயிராக விவசாயிகள் காய்கறிகள் சாகுபடியை மேற்கொண்டதோடு,  தென்னந்தோப்புகளை அழித்து வீட்டுமனை பட்டாவாக மாற்ற எண்ணிய விவசாயிகள் கூட  இந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

சோளக்கதிர்கள் தற்போது  அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதிகளில் இருந்து இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக  காட்டுப்பன்றிகள் வெளியேறி விளைநிலங்களுக்குள் படையெடுக்கின்றன. அடர்ந்த  சோளக்காட்டில் விடிய, விடிய பதுங்கி முற்றிய சோளக்கதிர்களை தின்று பெருத்த  சேதம் விளைவிக்கின்றன. இதேபோல மலையடிவாரத்தில் ஏக்கர் கணக்கில்  பயிரிடப்பட்டுள்ள மாமரங்களில் தற்போது பிஞ்சு விட்டு காய்கள் பருத்து  வருகின்றன.

இந்த மாந்தோப்புகளிலும் காட்டுப்பன்றி அட்டகாசம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. மா, தென்னை தோப்புகளில் மட்டுமின்றி  விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து பன்றிகள் கூட்டமாக காய்கறிகளை  சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல்  விவசாயிகள் திணறி வருகின்றனர். பயிர் சேதத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை  இழந்து தவிக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் விவசாயிகள் குறைதீர்  கூட்டத்தின் போது காட்டுப்பன்றிகளை ஒழிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வனத்துறை அதிகாரிகளும், மாவட்ட  நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே  ஆடு மற்றும் கோழிகளை மர்ம விலங்குகள் வேட்டையாடி ஆண்டு முழுவதும்  விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வரும்  நிலையில், அவற்றை தெருநாய்கள் என்று கூறி வனத்துறையினர் சமாளித்து வரும்  வேளையில், காட்டு பன்றிகளின் அட்டகாசத்தையாவது அடக்க வேண்டும் என  விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் பரமசிவம் கூறியதாவது:

காட்டுப்பன்றியை  வன விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்க வேண்டும். அதற்கு  மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காட்டுப்பன்றி மற்றும் வன  விலங்குகள் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்துக்கு ரூ.10  லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். முழு ஊனமுற்றால் ரூ.10 லட்சமும்,பகுதி ஊனமுற்றால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர்ச்சேத இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும்.

வனவிலங்குகள்  வராமல் தடுக்க அரசு முள்வேலி அமைப்பதோடு தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.  வனக்காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ரோந்து பணியை தீவிரப்படுத்த  வேண்டும். மாதந்தோறும் மாவட்ட வன பாதுகாவலர், விவசாயிகள் மற்றும்  பிரதிநிதிகளோடு கூட்டம் நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: