உமேஷ், அஷ்வின் அபார பந்துவீச்சு 227 ரன்னில் சுருண்டது வங்கதேசம்

மிர்பூர்: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி  முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில், முதல் டெஸ்டின் ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்கதேச அணியில் யாசிர் அலி, எபாதத் உசேனுக்கு பதிலாக மோமினுல் ஹக், டஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.

ஷான்டோ, ஜாகிர் ஹசன் இருவரும் வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். ஜாகிர் 15, ஷான்டோ 24 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஷாகிப் ஹசன் 16 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் புஜாரா வசம் பிடிபட்டார். மோமினுல் ஹக் உறுதியுடன் போராட... முஷ்பிகுர் ரகிம் 26, லிட்டன் தாஸ் 25, மெஹிதி ஹசன் மிராஸ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடிய மோமினுல் அரை சதம் அடித்தார். நூருல் 6, டஸ்கின் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட மோமினுல் 84 ரன் எடுத்து (157 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார்.

காலித் அகமது டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு சுருண்டது (73.5 ஓவர்). தைஜுல் இஸ்லாம் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 15 ஓவரில் 4 மெய்டன் உள்பட 25 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின் 21.5 ஓவரில் 3 மெய்டன் உள்பட 71 ரன்னுக்கு 4 விக்கெட், உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்துள்ளது (8 ஓவர்). கேப்டன் ராகுல் 3 ரன், கில் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: