ரஷ்யாவின் தாக்குதலுக்கு இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் அமெரிக்கா பயணம்: அதிபர் பைடனை சந்தித்து பேச்சு

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் பைடனை சந்தித்து அவர் பேசினார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே  கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா அதிக அளவு உதவிகளை குவித்து வருகிறது.  போர் தொடங்கியதில் இருந்து கடந்த  நவம்பர் 20ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மட்டும் சுமார் ரூ.1.53 ஆயிரம் கோடி ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். போர் தொடங்கியதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறும்போது,’ நன்றி. நன்றி என்ற இந்த வார்த்தை அமெரிக்காவுக்கு சொந்தமானது. நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இந்த பயணம் நமது நட்பை மேலும் வலுப்படுத்தும்’ என்றார். தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ உக்ரைன் மீது புதின் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறார். இதற்கு எந்தவித காரணமும் இல்லை. இருப்பினும் 300 நாட்கள் கடந்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கிறது என்றால் அதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி தான் காரணம். அமெரிக்க மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்கள் உங்கள் பக்கம் இழுத்து விட்டீர்கள்’என்றார்.

* அமைதிக்கு 10 அம்ச திட்டம்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் ஏற்கனவே அமைதி பற்றி பேசிவிட்டோம் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘அமைதியை ஏற்படுத்த 10 அம்ச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: