சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று தொடங்கியது: ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி மும்முரம்

சுசீந்திரம்: கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இன்று காலை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா தொடங்கியது. அதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணியும் விறு விறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழா 2 நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி முதல்நாளான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 2வது நாளான நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று முதலில் காலை 5 மணிக்கு ராமர், சீதைக்கு சிறப்பு அஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு 1500 லிட்டர் பால், மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவிய பொடி, பன்னீர், அரிசி மாவு பொடி, விபூதி, தயிர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, குங்குமம், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான ஷோடச அபிஷேகங்கள்  நடைபெறுகிறது. பின்னர் பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு ராமர், சீதைக்கு புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு பஜனை நடக்கிறது.

இரவு 7 மணிக்கு 8 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமியின் கழுத்து பாகம் வரை பூக்களை கொண்டு புஷ்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் வாடமல்லி, கிரேந்தி, மணமில்லாத வாசனை மலர்கள் தவிர்க்கப்படும். இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டு, தட்டுவடை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை  அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி, எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர்  கலந்து கொள்கின்றனர். ஜெயந்திவிழாவையொட்டி, ஆஞ்சநேயர் கோயில் வளாகம் 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: