ஆரணி பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது-10 பைக்குகள் பறிமுதல்

ஆரணி : ஆரணி பகுதிகளில் ெதாடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரணி டவுன் பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் தொடர் பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், சுந்தரேசன் மற்றும் போலீசார் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியை சேர்ந்த சீனுவாசன் மகன் சக்திவேல்(21) என்பதும், கடந்த சில வாரங்களாக ஆரணி டவுன் காந்தி சாலை, புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட்,  ராமகிருஷ்ணாபேட்டை, முள்ளிப்பட்டு எம்ஜிஆர் சிலை அருகே உட்பட பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, வடமாதிமங்கலத்தில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: