சேப்பாக்கம் தொகுதி நடுக்குப்பத்தில் புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியுதவியுடன் சேப்பாக்கம் நடுக்குப்பத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டதால், சேப்பாக்கம் நடுக்குப்பம் 1 முதல் 8 தெருக்கள் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருவில் உள்ள சுமார் 3000 மக்கள் பயன்பெறுவார்கள்.  

 

இத்திட்டப் பணிகளின் மூலம் சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைத்தல் மற்றும் 230 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும், பழைய கழிவுநீர் அமைப்பினை இணைக்கும் பணிகளும், 370 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணிகளும் நடைபெறும். இதை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120க்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.    

 

இந்நிகழ்ச்சிகளில், மேயர் பிரியா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை  இயக்குநர் கிர்லோஷ் குமார், நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக் குழு தலைவர் எஸ்.மதன்மோகன், கவுன்சிலர் மங்கை  உள்பட பலர் கலந்து கொண்டனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தார்.  இந்நிகழ்வின் போது அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக, அமைச்சர் அலுவலகத்தில் சிலம்பம் விளையாட்டிற்கு உபகரணங்கள் வேண்டி மனு அளித்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதை தொடர்ந்து, பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்கு உட்பட்ட சி.என்.கே. சாலையில் நடந்த நிகழ்ச்சியில் 500 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழு தலைவர் எஸ்.மதன்மோகன், கவுன்சிலர்கள் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மங்கை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: