எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக 25 ஆண்டுகள் தொண்டாற்றி, கனடாவில் தனது மகளுடன் வசித்து வந்த சுலோச்சனா ராமசேஷன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியில் சமூகத் தொண்டுக்குப் புகழ்பெற்ற ராமசேஷன் குடும்பத்தைச் சேர்ந்த சுலோச்சனா, தாமும் சமூகப் பணிக்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். சென்னையில் 550 கிளைகளையும், தமிழ்நாடு முழுவதும் 1300 கிளைகளையும் கொண்டிருக்கும் எக்ஸ்னோரா அமைப்பின் வளர்ச்சியில் சுலோச்சனா அம்மையாரின் பங்கு அளப்பரியது. குறிப்பாக, நரிக்குறவ மக்களின் நலனுக்காகத் தமது கணவர் ராமசேஷன் உடன் இணைந்து சுலோச்சனா ஆற்றிய பணிகள் ஏராளம்.

பசுமைப் பாதுகாப்பு, திடக் கழிவு மேலாண்மை ஆகியவை பற்றிய விழிப்புணர்வுக்காகவும் அவர் பல பணிகளை மேற்கொண்டார். பிறர்க்காகவே வாழ்ந்து மறைந்த சுலோச்சனா ராமசேஷனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எக்ஸ்னோரா குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: