விவசாயிகள் நலன் கருதி உருவாக்கப்பட்ட ‘உழவன்’ செயலியை இதுவரை 12.70 லட்சம் பேர் பதிவிறக்கம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்

சென்னை: விவசாயிகளுக்கு நலன்கருதி வடிவமைக்கப்பட்ட ‘உழவன்’ செயலியை இதுவரை 12.70 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.     

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை உழவர் நலத்துறை பல்வேறு விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. அனைத்து விவசாயிகளிடமும் தற்போது கைபேசி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் உழவன் செயலி வடிவமைக்கப்பட்டது.

அந்தவகையில், பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, அரசின் மானிய திட்டங்கள், போன்ற தகவல்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள உழவன் செயலி முக்கிய செயலாற்றுகிறது. கடந்த 2018ம் ஆண்டு 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி புதுப்பிக்கப்பட்டு, தற்போது 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை  இதுவரை 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.உழவன் செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு கைபேசியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், www.tnagrisnet.tn.gov.in அல்லது tnhorticulture.tn.gov.in அல்லது aed.tn.gov.in இணையதளம் மூலமாகவும் திட்டம்  பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளின் தினசரி வாழ்க்கையினை மிகவும்  எளிதாக்கி அதிக வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள  உழவன் செயலியினை இதுவரை பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைவரும் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: