அவரே நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்த எலான் மஸ்க் விலகல்?

வாஷிங்டன்: டிவிட்டர் நிறுவன தலைமை பொறுப்பில இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என்று அவர் நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்ததால் அவர் பதவி விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

டிவிட்டர் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார்.

இதையடுத்து, டிவிட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். இதையடுத்து, டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற எலான் மஸ்க், பெரும்பாலான ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பினார். மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகள், டிவிட்டர் நிறுவனத்தை மட்டுமல்ல அவரது டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடுகளையும் பாதித்தது. ஏற்கனவே டிவிட்டரால் தடை செய்யப்பட்ட, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் கணக்கை மீண்டும் அனுமதித்தார். அதே நேரத்தில் புதிதாக பலரது டிவிடடர் கணக்குகளை  தடை செய்தார்.

இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து தான் விலக வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் நடத்தினார்.  டிவிட்டரில் 1 கோடி 75 லட்சம் பேர் இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றனர்.   எலான் மஸ்க்கின் இந்த கேள்விக்கு 57.5 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.5 சதவீதம்  பேர் ‘இல்லை’ என்று வாக்களித்தனர்.

பெரும்பான்மையினர் எலான் மஸ்க் டிவிட்டர் தலைமை நிரவாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவின்படி செயல்படுவேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ள நிலையில், அவர் பதவி விலகிவிட்டு, டிவிட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  போன்ற மற்ற சமூக வலைதளங்களை விளம்பர படுத்தும் டிவிட்டர் கணக்குகள் இனி முடக்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

Related Stories: