பள்ளிக்கல்வி துறையின் டி.பி.ஐ. வளாகம் இனி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்; நூற்றாண்டு வளைவையும் திறந்து வைத்தார்

சென்னை: பள்ளிக்கல்வி துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்துக்கு, ‘பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவையும் அவர் நேற்று திறந்து வைத்தார். திமுக முன்னாள் பொதுச் செயலாளரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் அன்பழகனின் 101வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள பேராசிரியரின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரது உருப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, பெரியகருப்பன், ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக வீட்டிற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்பழகனின் குடும்பத்தினர் வரவேற்றனர்.

தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா-கலைஞர் சிலைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த க.அன்பழகன் உருவப்படத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின், ஆவடி நாசர், வெள்ளக்கோவில் சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாவட்ட செயலாளர் சிற்றரசு, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தில் நடந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றார். டி.பி.ஐ. வளாகத்துக்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் வளாகத்தின் உட்பகுதியில் பேராசிரியர் அன்பழகனின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல், பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவாயில் எண் 2ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவு மற்றும் பெயர் பலகை ஆகியவை ரூ.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம்  தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பேராசிரியரின் மகன் அன்புசெல்வன், பேரனும்  எம்எல்ஏவுமான வெற்றியழகன், தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளி  கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார்  உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101வது பிறந்தநாள் இன்று. ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு எம்பி. இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், கலைஞர் ஐந்தாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதியமைச்சர், 1977ம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் திமுகவின் பொது செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திமுகவின் வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியா தடத்தை விட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர்.

சுயமரியாதை இயக்க காலந்தொட்டு-இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரையில் தனது உரையால் வழிநடத்திக் கொண்டு இருந்த பேராசிரியர் இப்போதும் உணர்வால் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல, விளக்காகவும் இருந்தவர் பேராசிரியர். அவர் காட்டிய இனமான ஒளியில் நமது பயணம் தொடர்கிறது. இந்திய துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டே தனது பணி என்று சொன்னவர் பேராசிரியர். அத்தகைய இலக்கைக் கொண்டதாகவே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர்களில் முதலிடம், மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்ற இலக்கை திமுக அரசு அடைந்துள்ளது என்றால் இதுதான் பேராசிரியர் காண விரும்பிய கனவு தமிழ்நாடு. மாநில சுயாட்சி-மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர். இன்று இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக் குரல்கள் கேட்க தொடங்கி இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகளே மாநில சுயாட்சிக் கொள்கைகளைப் பேச தொடங்கி இருக்கும் காட்சியை இப்போது பார்க்கிறோம். நூற்றாண்டு விழா காணும் காலத்தில் பேராசிரியரின் பெரும்பாலான கனவுகள், பெரும்பாலானவர்களின் கனவுகளாக விரிவடைந்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும் முன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!” என்று வேண்டுகோள் வைத்தார் பேராசிரியர். இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101வது பிறந்தநாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டே தனது பணி என்று சொன்னவர் பேராசிரியர். அத்தகைய இலக்கைக் கொண்டதாகவே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Related Stories: