தூத்துக்குடியில் களை கட்ட துவங்கிய பனங்கிழங்கு விற்பனை-25 எண்ணம் கொண்ட கட்டு ரூ.80

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பனங்கிழங்குகள் விற்பனை களை கட்டதுவங்கியுள்ளது. 25 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ.80 முதல் 100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி 15ம்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதன் முக்கிய பொருளான பனங்கிழங்கு விற்பனையும் அமோகமாக நடக்கும். தூத்துக்குடியில் தற்போதே பனங்கிழங்குகள் விற்பனை களை கட்ட துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மார்க்கெட் பகுதிகள் மற்றும் முக்கிய காய்கனி கடைகளில் பனங்கிழங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம், போடம்மாள்புரம், காலாங்கரை, கூட்டாம்புளி, மறவன்மடம், சேர்வைக்காரன்மடம் ஆகிய பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகள் விளைவித்து, அறுவடை செய்யப்பட்டு தூத்துக்குடியில் விற்பனைக்கு வந்துள்ளன.

இவற்றில் பனங்கிழங்குகள் தனியாகவும், தவுன் எனப்படும் அதன் மேல் பனைவிதையினுள் உள்ள அரிவகை இனிப்பு பொருளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 25 பனங்கிழங்குகள் கொண்ட கட்டுகளாகவும், 50 பனங்கிழங்குகள் கொண்ட கட்டுகளாகவும் தனித்தனியாகவும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.80 முதல் 100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் உடன்குடி, ராமநாதபுரம் பகுதி பனங்கிழங்குகள் விற்பனைக்கு வந்து விடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில் தற்போதே பனங்கிழங்கு விற்பனை களை கட்டத்துவங்கியுள்ளது. பொங்கல் நெருங்கும் நிலையில் சீர்வரிசையுடன் கொடுப்பதற்கு விற்பனை இன்னும் சூடுபிடிக்கும் என தெரிகிறது.

Related Stories: