கொடைக்கானலில் குளுகுளு சீசனை கொண்டாட குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல் : மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவுகிறது. அதிகாலையில் உறைய வைக்கும் குளிருடன் துவங்குகிறது. பகல் நேரத்தில் வெயில், அவ்வப்போது மேகக் கூட்டம் முகாமிடுகிறது. இதனால் இதமான சூழல் நிலவுகிறது. ஆனால் இரவில் தலைகீழாக நிலைமை மாறி உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிர் சீசன் ஜனவரி முடியும் வரை தொடரும். வரும் நாட்களில் உறை பனி தொடங்கும் நிலை ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல் ஆகின. நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்து பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் ஆர்வத்துடன் படகு சவாரி செய்தனர். மோயர் பாயிண்ட் பகுதியில் மேகக்கூட்டத்தை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது.

வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் நடுங்கும் குளிரை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த நாட்களில் வியாபாரம் அதிகளவில் நடக்கும். மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருக்கும்’’ என்றனர்.

Related Stories: