பூங்கா நகர் நகை பட்டறையில் இருந்து 41 சவரனுடன் ஊழியர் எஸ்கேப்: மேற்கு வங்கம் விரைந்தது தனிப்படை

தண்டையார்பேட்டை: பூங்கா நகரில் உள்ள நகை பட்டறையில் இருந்து 41 சவரனுடன் மாயமான ஊழியரை பிடிக்க, தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர். பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, சவுகார்பேட்டை பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி, நகை செய்யும் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள், 6 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், பூங்கா நகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு நகை பட்டறையில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் ரூ.15 லட்சம் மதிப்பிலான 41 சவரன் நகைகளை இவரிடம் கொடுத்த பட்டறை மேலாளர் ரியாஜ் அலி மாலிக் (22), சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் அதை டெலிவரி செய்துவிட்டு வரும்படி அனுப்பியுள்ளார். அவருக்கு சிறிது நேரத்தில் ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

அதில் பேசிய கடை ஊழியர், ‘‘வால்டாக்ஸ் சாலையில் சென்றபோது தன்னை ஒரு மர்ம நபர் இடித்து கீழே தள்ளிவிட்டு, பையில் வைத்திருந்த 41 சவரன் நகைகளை திருடி சென்றுவிட்டார்,’’ என கூறிவிட்டு தலைமறைவானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில் யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான ஊழியரை பிடிக்க, தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர்.

Related Stories: