பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு ரூ.25 ஆயிரத்திற்கு 8 மாத குழந்தை விற்பனை; கிருஷ்ணகிரி பெண் கைது: தம்பதியும் சிக்கினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகேயுள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர், கடந்த 12ம் தேதி தனது 8 மாத ஆண் குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை எதிரில், இயற்கை உபாதையை கழிக்க குழந்தையை படுக்க வைத்துவிட்டு சென்றதாகவும், பின்னர் வந்து பார்த்தபோது காணவில்லை என்றும், யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் கணவர் வெங்கடேசனிடம் கூறியுள்ளார்.

பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் கடந்த 14ம் தேதி புகார் அளித்தார்.  போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் தனலட்சுமி மீதான பிடியை இறுக்கினர். ஆணும்- பெண்ணும், பஸ் நிலையத்தில் தனலட்சுமியிடம் பேசுவதும், பின்னர் குழந்தையை அவர்களிடம் கொடுப்பதும் தெரியவந்தது. மேலும் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயா (32). இவரது மனைவி சுமதி (37). திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இதனால், ‘தங்களுக்கு குழந்தை வேண்டும். அதற்காக பணம் தருகிறோம்’என தங்களின் செல்போன் எண்ணுடன் சமூக வலைத்தளமான முகநூலில் (பேஸ்புக்) பதிவு செய்துள்ளனர். அந்த பதிவை தனலட்சுமி பார்த்துள்ளார். அவருக்கு ஏற்கனவே 8 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். 3வதாக பிறந்த 8 மாத ஆண் குழந்தையை வளர்க்க தனலட்சுமிக்கு மன

மில்லை.

    

அதனால் குழந்தையை பணத்திற்கு விற்று விடலாம் என்று  திட்டமிட்ட தனலட்சுமி, கணவனுக்கு தெரியாமல் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவருடன் பேசிய திருப்பூர் தம்பதியினர் ரூ.25 ஆயிரத்திற்கு குழந்தையை வாங்கி கொள்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து, தனது குடும்பத்தினரிடம் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு சென்று வருவதாக பொய் சொல்லிவிட்டு குழந்தையுடன் சென்றவர், பின்னர் பஸ் நிலையத்தில், திரும்பூர் தம்பதியிடம் குழந்தையை கொடுத்து விட்டு, ரூ.25 ஆயிரத்தை வாங்கியுள்ளார்.

பின்னர் தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என தனலட்சுமி நாடகமாடியுள்ளார். இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு வந்தனர். அத்துடன் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய உதயா- சுமதி தம்பதி மற்றும் தனலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories: