கண்ணாடி பாலம், தீம்பார்க் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சென்னையின் முதன்மை சுற்றுலா தலமாக மாறுகிறது வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஏரி: மே மாதம் திறக்க ஏற்பாடு

அம்பத்தூர்: வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஏரியை ரூ.27 கோடி ரூபாய் செலவில், பசுமை பூங்காவாக மாற்றும் பணிகள் தற்போது 85 சதவீதம் முடிந்துள்ளன. இந்த ஏரி கண்ணாடி பாலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சென்னையின் முதன்மை சுற்றுலா தலமாக மாறி வருகிறது. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏரி 39  ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது.  இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்  வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி கடந்த 2018ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்க தன்வசம் 11.50 ஏக்கர் இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள  27.50 ஏக்கர் இடத்தை சீரமைப்பு பணிக்காக மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.  

ஏற்கனவே, இந்த ஏரியின் ஆழம் 1 மீட்டர் மட்டுமே இருந்தது. சீரமைப்பு  பணியை தொடர்ந்து 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன்  70 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில், இந்த ஏரியில், 27.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.27 கோடி செலவில் பசுமை பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டு திடல், படகு சவாரி, கண்ணாடி மேம்பாலம், திறந்தவெளி திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையம், ஆவின் பாலகம், குடிநீர் வசதி, மின் கழிப்பறை வசதி, எல்.இ.டி விளக்கு வசதிகள், பூங்காவிற்குள் அமர இருக்கை வசதி, புட்கோர்ட், 100 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்துமிடம், சுற்றிலும் தடுப்பு வேலி, பூங்காவிற்கு வருகை தருவோர் சுத்தமான சுகாதாரமான காற்றை சுவாசிக்க மூலிகை செடிகள், மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு பறவைகள் சரணாலயமாக மாற்றவும் பணிகள் நடந்து வருகிறது.

இதன் சிறப்பு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏரியின் மைய பகுதயில் கண்ணாடி தளத்துடன் சுமார் 250 மீட்டர் நீளத்தில் 12.5 மீட்டர் உயரத்தில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் படிக்கட்டும் லிப்ட் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் உள்ள மேக் ரிச்சி ட்ரி டாப் பிரிட்ஜ் வடிவத்தில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது, இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தோட்டம், நீரூற்று ஆகியவற்றின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. சிட்கோ நகர் வழியாக ஏரி தீம்பார்க் செல்ல நுழைவாயில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories: