பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கமாக வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என  ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  வேட்டி-சேலை வழங்குவது, பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும்.

அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும்,   இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.

இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும். தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், வரும் பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

Related Stories: