திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எழுதியுள்ள கடிதத்தில்; மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சித் தீர்மானம் அடிப்படையில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, திருச்சி, பாலக்கரை மெயின் ரோட்டில், முன்பிருந்த பிரபாத் தியேட்டர் எதிரிலுள்ள ரவுண்டானாவில், 23-02-2011 அன்று முழு உருவ வெங்கலச் சிலை நிறுவப்பட்டது.

அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு குறுக்கிட்டதால் திறப்புவிழா நடைபெறவில்லை. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, பலமுறை ரசிகர்கள் கோரிக்கை விடுத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், சிலை, அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில்,கடந்த 13 ஆண்டுகளாக இருந்தது. இதற்கிடையில், சிலையை திறக்கவேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்திரவின்படி, தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்திரவில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. சிலை நிறுவுவது சம்பந்தமான உச்சநீதிமன்ற உத்திரவின் அடிப்படையிலும், திருச்சியில் நிறுவப்பட்டுள்ள நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலை சம்பந்தமான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்திரவின் அடிப்படையிலும், திருச்சியில், வேறொரு முக்கிய சந்திப்பில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தன் கலைத்திறனால் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாக திகழ்ந்தவரும், கலைஞரின் நண்பராகத் திகழ்ந்தவருமான, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, இளவயதில் அவர்கள் குடும்பம் வாழ்ந்தது திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் என்பதால், திருச்சியில் அவருடைய சிலை அமைவது சாலப் பொருத்தமாக இருக்கும். தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், திருச்சியில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையையும் முக்கிய இடத்தில் நிறுவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: