பீமாகோரேகாவ் வழக்கில் திடீர் திருப்பம் ஸ்டான் சுவாமியை சிக்க வைக்க ஹேக்கர்கள் மூலம் ஆதாரம் திணிப்பு: அமெரிக்க நிறுவன அறிக்கையில் அதிர்ச்சி

புதுடெல்லி: பீமா கோரேகாவ் வழக்கில் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமியை சிக்க வைக்க, ஹேக்கர்கள் மூலம் அவரது கம்ப்யூட்டரில் ஆதாரங்கள் திணிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. 2018ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகாவ்வில் நடந்த வன்முறை தொடர்பாக  கைது செய்யப்பட்ட பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி(83), வழக்கு விசாரணையில் இருக்கும்போதே கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி மரணம் அடைந்தார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர், பழங்குடியினர் உரிமைக்காக போராடி வந்தவர். ஸ்டான் சுவாமி மற்றும் 15 பேர் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக என்ஐஏ குற்றம் சாட்டியிருந்தது. இவரது கம்ப்யூட்டரில் இருந்த மாவோயிஸ்ட் கடிதங்கள் வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம், ஸ்டான் ஸ்வாமியிடம் இருந்து புனே போலீசார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டரில் இருந்த தடயங்கள் குறித்து ஆய்வு செய்தது. அப்போது, கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதல், புனே போலீசார் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்த 2019 ஜூன் 12ம் தேதி வரை அந்த கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு மாவோயிஸ்ட் கடிதங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை திட்டமிட்டு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது. பீமா கோரேகாவ் கலவரம், பிரதமரை கொல்ல சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 13 பேர் இன்னும் சிறையில் உள்ள நிலையில், மறைந்த ஸ்டான் சுவாமி மீதான ஆதாரங்கள் பொய்யாக உருவாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Related Stories: