மாநகராட்சி பெண் கவுன்சிலரிடம் செயின் பறிப்பு; வடசென்னை பகுதியை கலக்கிய ‘ரெயின் கோட்’ கொள்ளையன் கைது: காதலியை குஷிப்படுத்த கைவரிசை காட்டியது அம்பலம்

சென்னை: போர் நினைவு சின்னம் அருகே சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவரிடம் மூன்றரை சவரன் செயினை பறித்து சென்ற பிரபல ‘ரெயின் கோட்’ கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. காதலியை குஷிப்படுத்துவதற்காகவே பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 59வது வார்டு கவுன்சிலராக சரஸ்வதி உள்ளார். இவர், கடந்த சனிக்கிழமை தலைமை செயலகம் வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். போர் நினைவு சின்னம் அருகே செல்லும் போது, ‘ரெயின் கோட்’ அணிந்து கொண்டு பைக்கில் வந்த 2 பேர் திடீரென பெண் கவுன்சிலர் சரஸ்வதி அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றனர். ஆனால் சரஸ்வதி தனது செயினை விடாமல் பிடித்துக்கொண்டு தடுத்தார்.

இருந்தாலும் கவுன்சிலரின் மூன்றரை சவரன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஆசாமிகள் மாயமாகி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, உடனே சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார், தலைமை செயலகம் முதல் போர் நினைவு சின்னம் வரையிலான சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர். அதன்படி விசாரணை நடத்திய போது, கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக் மண்ணடியில் திருடப்பட்ட பைக் என தெரியவந்தது. பிறகு கொள்ளையர்கள் சென்ற வழி முழுவதும் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் அப்துல் ஜாபர் (20) என்பதும், இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

அப்துல் ஜாபர் எப்போதும் ‘ரெயின் கோட்’ அணிந்து கொண்டுதான் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளான். தனது நண்பரான வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் இணைந்து வடசென்னை முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ‘ரெயின் கோட்’ கொள்ளையன் அப்துல் ஜாபர் மற்றும் அவனது கூட்டாளியான 17 வயது சிறுவனையும் நேற்று முன்தினம் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து பெண் கவுன்சிலரிடம் பறித்த மூன்றரை சவரன் செயின் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய திருட்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் ரெயின் கோட் கொள்ளையன் அப்துல் ஜாபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அப்துல் ஜாபர் தண்டையார்பேட்டையில் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். காதலியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஜாபரும், நண்பரும் இருவரும் மதுரவாயலில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தனர். அப்துல் ஜாபர் பெண்களிடம் பறிக்கும் செயினை முதலில் தனது காதலிக்கு அணிவித்து அழகு பார்ப்பார். அதன் பிறகு அந்த நகைகளை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து நட்சத்திர ஓட்டலுக்கு  காதலியுடன் சென்று உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசாருக்கு சந்தேகம் வராதபடி அப்துல் ஜாபர் ‘ரெயின் கோட்’ அணிந்து தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: