ஊட்டி அருகே கோயிலுக்கு சென்று திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் பலி

ஊட்டி: ஊட்டி அருகே கோயிலுக்கு சென்று திரும்பிய 3 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவரை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது சீகூர் வனபகுதி. இங்கு பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று (திங்கள்) கார்த்திகை தீபம் திருவிழாவிற்காக கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதற்காக ஊட்டி, கோத்தகிரி, எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர், பேரகணி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று வந்தனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு செல்லும் வன பகுதியில் ஓடும் ஆனிக்கல் ஆற்றை கடந்து சென்றனர். காலையில் தண்ணீர் குறைந்த அளவே ஆற்றில் சென்றது. கோயிலுக்கு சென்றுவிட்டு மாலை 6.15 மணி அளவில் மீண்டும் அதே ஆற்றை பக்தர்கள் கடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த ஆறு அமைந்துள்ள மேல்பகுதி மலைகள் மீது பெய்த கனமழை காரணமாக திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆற்றை கடக்க முயன்ற ஊட்டி ஜக்கனாரை கிராமத்தை சார்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய 4 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பக்தர்கள் உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடினர். இரவு நேரம் என்பதாலும், ஆற்றில் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடியதாலும் மாயமான 4 பெண்களை இரவு 12.30 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. யானை காடு என்பதாலும், யாரும் தென்படாததாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல நேர தேடுதலுக்கு பின்னர் 3 பேரின் உடல்கள் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது. மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: