அம்பத்தூர் பகுதியில் வாட்ஸ்அப் மூலம் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்; 10 கிலோ பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அம்பத்தூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அம்பத்தூர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கருக்கு மெயின் ரோடு, மேனாம்மேடு அருகே உள்ள கருப்பன் குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர், கையில் பையுடன் சுற்றித்திரிந்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரிக்க முயன்றபோது, தப்பியோடினார். போலீசார் விரட்டி பிடித்து விசாரித்தனர். அதில், வெங்கடாபுரம் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்துரு (34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இந்த பையை சோதனை செய்தபோது, 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, வாட்ஸ் குழு மூலம் மாணவர்கள் மற்றும் வடமாநில கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: