ஆறுதல் வெற்றிக்காக அதிரடி ஆட்டம்; கலக்கிய கிஷான்-கோஹ்லி

சட்டோகிராம்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் அணி 3 ஆட்டங்கள்  கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அவற்றில் முதல் 2 ஆட்டங்களில் வென்ற வங்கதேசம் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் ஆட்டம் சட்டோகிராமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கம் பந்து வீச்சை தேர்வு செய்தது.  காயமடைந்த கேப்டன் ரோகித், சாஹர் ஆகியோருக்கு பதில் இஷான், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். துணைக் கேப்டன் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்  தவான் 3ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த  இஷான் கிஷன்-விராத் கோஹ்லி இணை  வங்கத்தின் பந்து வீச்சை பதம் பார்த்தது.

அதிலும் இளம் வீரர் இஷான் அதிரடியாக விளையாடி 85 பந்துகளில் தனது முதலாவது சதத்தை விளாசினார். அதன்பிறகு  கூடுதல் வேகம் எடுத்த இஷான் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி  126பந்துகளில்  இரட்டைச் சதமும் வெளுத்தார். தொடர்ந்து 33வது ஓவரில் அவர் ஆட்டமிழந்த போது 210(131பந்து, 24பவுண்டரி, 10சிக்சர்)ரன் குவித்திருந்தார். இஷான், கோஹ்லியுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 290 ரன் குவித்தனர். இஷானுக்கு பொறுமையுடன் ஒத்துழைப்பு அளித்து வந்த கோஹ்லியும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் சதத்தை 85வது பந்தில் விளாசினார். அவர்  117(91பந்து, 11பவுண்டரி, 2சிக்சர்) ரன்னில் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்தவர்களில்  வாஷிங்டன் 37, அக்சர் 20 ரன் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை

ஒரு கட்டத்தில்  இந்தியா 35.5ஓவரில்  2 விக்கெட் இழப்புக்கு 305ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு 104ரன் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை பறிகொடுத்தது.   எனவே இந்தியா எளிதில் 500யை கடக்கும் என்ற ஆசை கானல் நீரானது.

அதனால் 50 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 409ரன் எடுத்தது. வங்கதேசம் தரப்பில்  ஷாகிப், தஷ்கின், ஹோசைன் தலா 2விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து 410ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கம்  34ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 182ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா 227ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை சுவைத்தது. வங்க அணியில்  அதிகபட்சமாக அல் ஹசன் 43ரன் எடுத்தார். இந்திய வீரர்கள் ஷர்துல் 3, அக்சர், உம்ரன் தலா 2, வாஷிங்டன் சிராஜ், குல்தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். வாஷிங்டன்னுக்கு 28ஓவரை மட்டுமே வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த ஒரே ஒரு ஓவரில், அவர் 2 ரன் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

Related Stories: