காலிறுதி புயலில் கரை சேர்ந்த அர்ஜென்டீனா; காணாமல் போன நெதர்லாந்து

தோஹா: பெரும் புயலாக கத்தாரில் மையம் கொண்டுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில்  அர்ஜென்டீனா, குரோஷிய அணிகள் கரைசேர, உலகின் நம்பர் ஒன் அணியான பிரேசில், நெதலார்ந்து அணிகள் காணாமல் போயின. லுசெயில் அரங்கில் நேற்று நடந்த 2வது காலிறுதியில்  நெதர்லாந்து- அர்ஜென்டீனா  அணிகள் களம் கண்டன. உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் அர்ஜென்டீனாவும், அதன் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸியும் களம் இறங்கிய ஆட்டம் என்பதால் அரங்கம் அர்ஜென்டீனா ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. ஒருமுறையாவது கோப்பையை வென்று விடும் இலக்கில் களமிறங்கிய நெதர்லாந்து ரசிகர்களுக்கும் அரங்கில் பஞ்சமில்லை.

அதற்கேற்ப இரண்டு தரப்பிலும் முதல் பாதியில் கோலடிக்க சமபலத்தில் மல்லுக் கட்டின.  இரண்டுத் தரப்பும் அடிக்கடி எதிரணி கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் மெஸ்ஸி, எதிரணி வீரர்களை கடந்து வந்து பந்தை மொலினாவிடம் தட்டி விட்டார். அவரும் அதை கோலாக்க அர்ஜென்டீனா முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து 2வது பாதியில் ஆட்டதின் 73வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்செல் செய்த தவறால் அர்ஜென்டீனாவுக்கு  பெனால்டி கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை  மெஸ்ஸி, அலட்டிக் கொள்ளாமல்  தன் பாணியில் தட்டி விட அது கோலானது. அதன் பிறகு ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்க அர்ஜென்டீனா வெற்றி வாய்ப்பை நெருங்கியது.

அப்போது ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பதிலி ஆட்டக்காரர் ஸ்டீவன் பெர்குவிஸ் தட்டித் தந்த பந்தை மற்றொரு பதிலி ஆட்டக்கார் வெவுட் வெகோர்ஸ்ட்  கோலாக மாற்றினார். அதனால் அர்ஜென்டீனாவுக்கு  ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கூடுதல் நேரத்தில்  கூப்மைனர்ஸ்  உதவியுடன் ஆட்டத்தின் 111வது நிமிடத்தில் வெவுட் மற்றொரு கோல் அடித்ததால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அதனால் கூடுதலாக வழங்கப்பட்ட 30வது நிமிடங்களிலும் 2 அணிகளும் கோல் அடிக்கவில்லை.

எனவே ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அணிக்கு தலா 5 கோல்களை அடிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.  அவற்றில் நெதர்லாந்து முதல் 2 வாய்ப்புகளையும்,  அர்ஜென்டீனா 4வது வாய்ப்பையும் தவறவிட்டது. அதனால் ஆட்டம் 4-3 என்ற கணக்கில் முடிவுக்கு வர அர்ஜென்டீனா  அரையிறுதிக்கு முன்னேறியது. வாய்ப்பை இழந்த நெதர்லாந்து வீரர்களும்,  ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறியது அரங்கையே சோக மயமாக்கியது. முதல் காலிறுதியில் உலகின் நெம்பர் ஒன் அணியான பிரேசிலை  ‘பெனால்டி ஷூட் அவுட்’ மூலம் வீழத்திய குரோஷியா அணி  அரையிறுதியில் அர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம்  செவ்வாய் கிழமை நள்ளிரவு நடைபெறும்.

Related Stories: