குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்வு பூபேந்திர படேல் நாளை பதவியேற்பு; ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார்

அகமதாபாத்: குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை நடைபெறும் விழாவில் 2வது முறையாக குஜராத்தின் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பாஜ வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தொடர்ந்து, 7வது முறையாக ஆட்சியை பிடித்து பாஜ சாதனை படைத்துள்ளது.

2வது முறையாக பூபேந்திர படேல் 12ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று பாஜ தலைமை அறிவித்தது. இதையடுத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை பூபேந்திர படேல் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

நாளை முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ள நிலையில், பாஜ புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை காந்திநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் மத்திய பார்வையாளர்களாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், சட்டமன்ற கட்சி தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்த்தெடுக்கப்படார்.  இதையடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து பூபேந்திர படேல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் பாஜ மாநில தலைவர் சிஆர் பாட்டீல்,  ​எம்எல்ஏக்கள் கனு தேசாய், கன்பத் வாசவா, ஹர்ஷ் சங்கவி, ஜிது வகானி, பூர்ணேஷ் மோடி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். நாளை காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் புதிய அரசு பதவி ஏற்கும் விழா நடைபெறுகிறது. இதில், குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள்.

Related Stories: