இந்தியா வல்லரசு நாடாக திகழும்: வெள்ளை மாளிகை அதிகாரி பேச்சு

வாஷிங்டன்: ``இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது; மற்றொரு வல்லரசாக இருக்கும்,’’ என்று வெள்ளை மாளிகையின் ஆசிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்கள் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை சவால்களைப் பற்றி விவாதிக்கும் ஆஸ்பென் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.

இதில் பேசிய வெள்ளை மாளிகையின் ஆசிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்பெல், ``கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா-இந்தியாவை போன்று வேறு எந்த இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவும் இந்தளவு வேகமாக, ஆழமாக, வலுவாக்கப்படவில்லை.   இந்தியா தனித்துவமான உத்திகளைக் கொண்டுள்ளது.  இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது.  தனிப்பட்ட முறையில் அதிகாரமிக்க நாடாக மாற விரும்பும் இந்தியா மற்றொரு வல்லரசு நாடாக இருக்கும்.

 

இந்தியா உடனான உறவில் இலக்கு நிர்ணயித்து, இணைந்து பணியாற்ற வேண்டும். விண்வெளி, கல்வி, பருவநிலை, தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறைகளிலும் இந்தியா உடனான இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது,’’ என்று கூறினார்.

தீவிரவாத ஒழிப்பு குழு கூட்டம்:  இந்தியா-அமெரிக்கா தீவிரவாத ஒழிப்பு கூட்டுக் குழுவின் கூட்டம் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பிராந்திய மற்றும் உலகளாவிய தீவிரவாத அச்சுறுத்தல்கள், தடுத்து நிறுத்தும் சட்ட அமலாக்கம், நீதித்துறை கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சென்ற அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத ஒழிப்பு பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் திமோதி பெட்ஸ் தலைமையிலான குழு, அடுத்த வாரம் இந்தியாவில் ஆலோசனை நடத்த உள்ளது.

Related Stories: