குஜிலியம்பாறையில் வறட்டாற்று ஓடையில் சிக்கி கிடக்கும் முட்புதர்கள்-மழைநீர் தேங்காமல் செல்ல தூர்வார கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் செல்லும் வறட்டாற்று ஓடையில் முட்புதர்கள் சிக்கி, மழைநீர் செல்லும் போது அடைப்பு ஏற்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி அடைப்பு ஏற்பட்ட இடத்தில் தூர்வாரி மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறையில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ள சாலை எதிரே வறட்டாற்று ஓடை செல்கிறது. மழை பெய்யும் நாட்களில் ஆர்.கோம்பை, ராமகிரி மலை அடிவார பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் முழுவதும் இந்த வறட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும்.

இந்த வறட்டாற்றில் செல்லும் மழைநீர் முழுவதும் குஜிலியம்பாறையில் உள்ள சின்னக்குளம், பெரியகுளத்தில் சென்று தேங்குகிறது. இந்த 2 குளங்களிலும் தேங்கி நிற்கும் மழைநீரால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதால், இப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். குஜிலியம்பாறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது குஜிலியம்பாறை வறட்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது முட்புதர்கள் மழைநீருடன் அடித்து செல்லப்பட்டது. இவ்வாறு அடித்து செல்லப்பட்ட முட்புதர்கள் குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகம் எதிரே செல்லும் வறட்டாற்றின் ஒரு பக்கத்தில் சிக்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வறட்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து செல்லும் போது அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. நடப்பாண்டில் பருவமழை காலம் துவங்கும் முன்பாக குளங்களை தூர்வாரியும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் மழை பெய்யும் நாட்களில் நீர்நிலைகளில் ஏற்படும் அடைப்புகளை அகற்றியும், மழைநீர் சீராக செல்வதற்கு தூர்வாரியும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் குஜிலியம்பாறை வறட்டாற்றில் முட்புதர்கள் சிக்கி அடைப்பு ஏற்பட்டு, பல நாட்கள் ஆகியும் இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இனிவரும் நாட்களில் மழை பெய்யும் போது வறட்டாற்று ஓடைய வழியே மழைநீர் முழுவதுமாக கடந்து செல்ல முட்புதர்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை ஒட்டியவாறு செல்லும் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே செல்லும் வறட்டாற்று ஓடையிலும் சிக்கியுள்ள முட்புதர்களை அகற்றி நடவடிக்கை எடுத்தும், மழைநீர் தேங்கி நிற்காமல் செல்ல தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: