வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட சென்றபோது டிடிஆர் கீழே இறக்கி விட முயன்றதால் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்: தஞ்சை, விழுப்புரம், செங்கல்பட்டில் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி


தஞ்சாவூர்: உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி, காவிரி பிரச்னையில் தீர்வு காணவில்லை. கோதாவரி- காவிரி நதிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்படவில்லை எனக்கூறி அவருக்கு எதிராக தமிழகத்திலிருந்து 111 விவசாயிகள் வாரணாசி தொகுதியில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர். அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 120 விவசாயிகள் வாரணாசி செல்வதற்காக கன்னியாகுமரி-பனாரஸ் வாராந்திர காசி தமிழ் சங்கம் விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருச்சி வந்த ரயிலில் அனைவரும் ஏறினர். 120 பேரில் 39 பேருக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு உறுதிசெய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் 120 பேரும் ரயிலில் பயணித்தனர். ரயில் தஞ்சாவூர் அருகே வந்தபோது டிக்கெட் பரிசோதகர், ‘முன்பதிவு உறுதியான 39 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு உறுதியாகவில்லை. காத்திருப்பு பட்டியலில் தான் உள்ளது. நீங்கள் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த ரயில் காலை 6.40 மணியளவில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்து நின்றது. இதனையடுத்து அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், ரயிலை விட்டு கீழே இறங்கினர். பின்னர் ரயில் 3 நிமிடத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட தயாரானது. அப்போது சில விவசாயிகள் ரயிலில் ஏறி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை புறப்பட விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விழுப்புரம், செங்கல்பட்டு செல்லும் வழியில் இருக்கைகள் ஒதுக்கி தருவதாக கூறினர். ஆனால் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தராததால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அடுத்தடுத்து ரயிலை நிறுத்தி போராட்டம் நடத்தினர். மூன்று ரயில் நிலையங்களில் சுமார் 7 மணி நேரம் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பயணிகள் அவதியடைந்தனர். இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

The post வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட சென்றபோது டிடிஆர் கீழே இறக்கி விட முயன்றதால் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்: தஞ்சை, விழுப்புரம், செங்கல்பட்டில் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: