கனமழை எச்சரிக்கை!: செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறப்பு.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

இந்த ஏரியில் இருந்து கடந்த காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 22 அடியில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக உள்ளது. அந்த வகையில் தான்  மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: