சபரிமலையில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்: இன்று தரிசனத்துக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில்  தரிசனத்துக்காக நேற்று  அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து இன்றும், வரும் 12ம்  தேதியும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்  தரிசனத்திற்காக முன்பதிவு  செய்து உள்ளனர். சபரிமலை  ஐயப்பன் கோயிலில் பிரசித்தி  பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே  உள்ளன.  கடந்த மாதம் 16ம் தேதி  மாலை நடை திறந்தது முதல்  சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு  நாள் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மண்டல பூஜை நெருங்கி  வருகிறது. ஆகவே பக்தர்களின் வருகை மேலும்  அதிகரித்து உள்ளது. நேற்று 96 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன் பதிவு செய்திருந்தனர்.

இதில் 94 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (9ம்  தேதி) தரிசனத்திற்காக 1 லட்சத்து 5  ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள்  முன்பதிவு செய்துள்ளனர். இந்த மண்டல  சீசனில் 1 லட்சத்திற்கும் அதிகமான   பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு  செய்வது இதுவே முதல் முறையாகும். இதே  போல் வரும் 12ம் தேதியும் இதுவரை 1  லட்சத்து 5  ஆயிரத்திற்கும் அதிகமான  பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். கிறிஸ்துமஸ்  விடுமுறை நெருங்கி  வருவதால் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று அதிகாலை 3  மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மிக நீண்ட  வரிசையில் காத்திருந்தனர்.

Related Stories: