தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு; ஆயுதங்கள் பயன்படுத்தாத போதும் ஜல்லிக்கட்டு கொடூர விளையாட்டா? பீட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்பட மிருகங்களை கொண்டு நடத்தப்படும் விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று 7வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பீட்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான்,‘‘காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவதில்லை, அவை கட்டாயப்படுத்தப்படுகிறது.

எனவே இந்த விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கள ஆய்வு செய்து சேகரித்து கொடுத்துள்ள தரவுகள், ஆதாரங்கள், அறிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொண்டு மறுஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்டு சொன்னால் ஜல்லிக்கட்டு ஒரு கொடூர விளையாட்டு என வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள்,‘‘ஜல்லிக்கட்டு விவகாரத்தை பொருத்தமட்டில் ஆயுதங்களை எவரும் பயன்படுத்துவது கிடையாது.

அப்படி இருக்கும் போது அதனை கொடூர விளையாட்டு என்று எப்படி கூற முடியும்? ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வாதங்களும் நிறைவடைந்து விட்டது. தமிழக அரசு தரப்பு, இடையீட்டு மனுதாரர்களின் எழுத்துப்பூர்வ வாதங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசின் வழக்கறிஞர் டி.குமணன் நியமிக்கப்படுகிறார், என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: