தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டி உயர்வு வீடு, வாகன கடன் இஎம்ஐ மேலும் உயரும்: பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி

மும்பை: பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 0.35 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு நிதிக்கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.35 சதவீதம் உயர்த்தி 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து, தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி விட்டன. தற்போதைய உயர்வால், மேலும் வட்டி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரெப்போ வட்டி மொத்தம் 2.25 சதவீதம் உயர்ந்துள்ளது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ள கவர்னர் சக்தி காந்ததாஸ், அர்ஜூனன் பார்வை போல, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார். அடுத்த 12 மாதங்களில் பண வீக்கம் 4 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும். இது முன்பு கணித்திருந்த 7 சதவீதத்தை விட குறைவாகும். சில்லறை விலை பண வீக்கம் நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும்.  

பீம் ஆப்ஸ் மூலம் யுபிஐ முறையில் வங்கிக் கணக்கில் இருந்து பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கூடுதல் வசதிகள் அறிமுகம் செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி யுபிஐ பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர், தங்கள் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட பரிமாற்றத்துக்காக பணத்தை ஒரு முறை ஒதுக்கீடு செய்து வைத்தால் போதும். அதனை சம்பந்தப்பட்ட பரிமாற்றத்துக்கு தானியங்கி முறையில் வரம்பின்றி எடுத்துக் கொள்ளப்படும். ஓடிடி இணையதளத்தில் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் தானோக எடுத்துக் கொள்ளப்படுவது போல மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு, அரசு பத்திரங்களில் முதலீடு செய்தல் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறது.

Related Stories: